Monday, January 8, 2018

பிரம்மகத்தி

நான் பள்ளிப்பருவத்தின் கடைசி கட்டத்தை நெருங்கும் வரை, எங்கள் வீட்டில் இரண்டு பாட்டிகள் இருந்ததுண்டு. இப்படிச் சொன்னவுடன், “ஓஹோ, அம்மாவோட அம்மா, அப்பாவோட அம்மா ரெண்டு பேருமா?” என்று எண்ணங்கள் தானாக முன்தீர்மானம் செய்கிறதல்லவா? வீட்டிற்குப் புதிதாக வரும் விருந்தினர்களும் அவ்வாறே கேட்பதுண்டு. அந்தப் பாட்டிகள் இருவரும் அப்பாவுக்கு அத்தைகள்; அதாவது அப்பப்பாவின் (அப்பாவின் அப்பா = அப்பப்பா = தாத்தா) சகோதரிகள்.

இரண்டு பேரும் டாம்&ஜெர்ரியின் மனித உதாரணங்கள். பல்வேறு தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் பரம்பரைப் பகையுள்ள இரு மனிதர்கள் சந்தித்தால் என்ன மாதிரியான முகபாவங்கள் இருவரது முகத்திலும், கண்களிலும் தோன்றுமோ, அப்படி ஒரு காட்சியை தினந்தினம் நேரில் நான் பார்த்திருக்கிறேன் (தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள் பார்க்கும் மக்களுக்கு இக்காட்சியைக் கற்பனை செய்வது சிரமமாயிருக்காது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை). ஆனால், உண்மையில் இருவருக்கும் அப்படி ஒரு புரிதல் இருந்தது. அவருக்கு இவர் பணம் கொடுப்பதும், இவருக்கு அவர் சாப்பாடு பரிமாறுவதுமாக ஒரேஎங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகைஎமோஷன்கள். எனினும் வெளியில் மட்டும் கெத்தாகஇஞ்சி தின்ன குரங்கு போல்இருவரும் முகத்தைச் சுழிப்பதும், கண்ணை அகலத் திறந்து முறைப்பதும், உதட்டைப் பிதுக்கிக் கையை அசைப்பதும், தோளில் கன்னத்தை இடிப்பதுமாக சைகையில் காதல் மொழி போலச் சைகையில் சண்டை மொழியை உருவாக்கியவர்கள் (டால்கியென் அடுத்து ஏதேனும் புதிய மொழி உருவாக்குவதென்றால் என்னிடம் உதவி கேட்கலாம்; சரி, அவரை விடுங்கள்; நம் மதன் கார்க்கியாவது ஏதேனும் கேட்கட்டும்).

நிற்க. சொல்ல வந்த விஷயத்தை மறந்துவிட்டேனே! பெரியத்தை (அப்பாவுக்கு அத்தை எனக்கு அத்தைப் பாட்டி என்றாலும், இருவரையும்அத்தைஎன்றே கூப்பிட்டுப் பழகிவிட்டேன்) சின்னத்தையை ஏசப் பயன்படுத்தும் தலையாய வார்த்தை, ‘பிரம்மகத்தி’. நாஞ்சில் நாடனிடம் கேட்டுத்தான் பொருளறிய வேண்டும். “கக்கூஸுக்குப் போகணும்; செத்த வந்து கையப் புடிச்சு அழைச்சிட்டுப் போறாளா பாரு, பிரம்மகத்தி!”, “பசிக்கும்போது சாப்பாடு போடாம எங்க போய்த் தொலைஞ்சாளோ, பிரம்மகத்தி” என்று நமக்கு ‘ஓத்தா’ போல பெரியத்தைக்கு ‘பிரம்மகத்தி’. வாக்கியத்தின் இலக்கணங்களுக்கு அப்பாற்பட்ட அனைத்து விதமான பிரயோகங்களிலும் பொருந்தக்கூடிய ஒரு மாயச்சொல்.

இந்த ‘ஞாபகம் வருதே’ நினைவுகளுக்குக் காரணம் சமீபத்தில் நண்பர்கள் பலரும் எனது சில பதிவுகளைப் படித்துக் கூறிய பொதுவான குற்றச்சாட்டு. “நல்லாத்தான் எழுதுற” என்று அவர்கள் சொல்லும்போது பெருமிதத்தில் துடிக்கும் இதயம், அந்த ‘ற; என்ற இழுப்பில் சற்றே வாடி, “ஆனா, கெட்ட வார்த்தை நெறைய வருதேப்பா” என்று முடிக்கும்போது ஒரு மூலையில் போய் முடங்கியிருக்கும். “கெட்ட வார்த்தைக்குப் பதிலாக **** பயன்படுத்தலாமே”, “சில இடங்களில் வலிந்து திணித்தது போலிருக்கிறதே, அதை குறைக்கலாமே” என்ற அக்கறையான சில கரிசனங்களுக்கும் குறைவில்லை.

இவையனைத்தும் சேர்ந்து என்னை ஒரு முக்கியமான கேள்விக்கு இட்டுச் செல்கிறது. எது கெட்ட வார்த்தை? ‘முத்து’ திரைப்படத்தில் இடம்பெறும் நகைச்சுவைக் காட்சி இவ்விடத்தில் குறிப்பிடத்தக்க வேண்டிய ஒன்று. ‘பட்டி’ என்ற சொல்லுக்கான அர்த்தம் புரியாமல் அல்லாடும் அரசியல் கிழவர் ரஜினிகாந்த் படும்பாடு ஒரு முக்கியமான அம்சத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது. கெட்ட வார்த்தைகள் மொழியாலும், சூழ்நிலைகளாலும், இன்ன பிற இதர காரணிகளாலும் அந்தந்த நேரத்தில், அந்தந்த இடத்தில் வரையறுக்கப்படுகின்றவை. ‘டாய்லெட்’ எனும் சொல்லை நாம்தான் கழிவறைக்கான சொல்லாடலாக வரையறுத்துவிட்டோம். உண்மையில், அது மனிதர்கள் குளித்து, உடைமாற்றிப் புத்துணர்வோடு வரும் ஒரு இடத்தைக் குறிக்கும் சொல். ‘லூ’ அல்லது ‘லேவடரி’ என்ற சொல்தான் கழிவறையைக் குறிக்கப் பயன்படுத்தப் படும் சொல்.

பெருமாள் முருகனின் நூல்களில் கெட்ட வார்த்தைகள் சர்வசாதாரணமாகப் புழங்கும். நாஞ்சில் நாடனின் படைப்பான ‘கும்பமுனி’ எனும் கதாபாத்திரம் பேசாத கெட்ட வார்த்தையே இல்லை. இன்னும் சொல்லப் போனால், ‘குண்டி’ என்ற சொல்லற்ற கும்பமுனி கதைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

சரி, கோனார் தமிழுரையின் சிறுவினா போன்ற ஒரு உரையைப் பார்த்தாயிற்று. இப்போது, ‘அதுக்கும் மேல’ நெடுவினா அளவிற்கு எடுத்துச் செல்வோம். என் வீட்டில் நான் ‘சூத்து’ என்று சொன்னால் அது கெட்ட வார்த்தை; ஆனால், கல்லூரியில் ‘சூத்த மூட்றியா?’ என்பது சர்வசாதாரணமாக நக்கலாகச் சொல்லப்படும் வாக்கியம். ‘ஓத்தா’ எனும் சொல் மட்டும் எத்தனை எத்தனை வெவ்வேறு பயன்பாடுகளில் பிரயோகிக்கப்படுகிறது? (ஆங்கிலத்தில் இந்த அளவிற்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும் சொல், ‘ஃபக்’). பெண் சார்ந்த வார்த்தைகள் என்ற வகைமைக்குள் செல்ல வேண்டாம்; இப்பதிவின் நோக்கம் அதுவல்ல. மகிழ்ச்சி, கோபம், துக்கம், வெறுப்பு, பொறாமை, ஆனந்தம், இன்பம் என மனித மனத்தின் எல்லா உணர்ச்சிகளுக்குமான ஒரே வெளிப்பாடு ‘ஓத்தா’ என்று நான் சொன்னால் இதைப் படிக்கும் எவராவது மறுக்க முடியுமா? ஆண், பெண் பாகுபாடின்றிப் பயன்படுத்தப்படும் இவ்வார்த்தை ஒரு பாலினத்தை, ஒரு தெய்வத்துக்குச் சமமான உறவைக் குறிக்கிறது என்பதைத் தாண்டி, அவ்வார்த்தை வாயிலிருந்து வெளிவரும்போதும், வெளிவந்த பின்னரும் மனதடையும் ஒரு உள்ளமைதியை யாரேனும் உணர்ந்திருக்கிறோமா? அடுத்த முறை முயன்று பாருங்கள்.

நீங்கள் உண்மையிலேயே கோபமான மனநிலையில் “ஓத்தா, சரியான லூசுக் கூதிடா அவன்” என்று ஒருவரைச் சொன்ன நொடியில் - ஒரு கணப்பொழுதில் - உங்கள் கோபம் சற்றேனும் தணிவதை உணர முடியும். இவ்விளைவு ‘சூத்து’, ‘சுண்ணி’, ‘கூதி’ போன்ற பல சொற்களிலும் விளையும் விஞ்ஞானம். இதைச் சற்றே ஆராய்ந்தால், ஒரு எளிமையான உண்மை புலப்படும். பெரும்பாலான - 85%, 90% என்று எண்ணிக்கைகளைக் குறிப்பிட விரும்பவில்லை - கெட்ட வார்த்தைகளில் உச்சரிப்பிற்கான அழுத்தம் இருப்பதே காரணம். ‘த’கரம், ‘ண’கரம், ‘ட’கரம் எல்லாம் சற்றேறக்குறைய அனைத்துக் கெட்ட வார்த்தைகளிலும் இருக்கின்றன.

அப்படி இருக்க வேண்டியதன் அவசியம் என்ன? அதையும் சற்றே அலசுவோம். வயது பேதமற்று ஒரு மனிதனுக்குக் கோபம் வந்தால் என்ன செய்கிறோம்? கெட்ட வார்த்தைகள் பேசுவோம் என்பது சரியான பதிலல்ல. குழந்தைகளுக்குக் கெட்ட வார்த்தைகள் தெரியாது. பல்லைக் கடிப்பதோ, அல்லது பல், நாக்கு சார்ந்த தசைகளை முறுக்குவதுதான் நாம் செய்யும் முதல் அனிச்சைச் செயலாக இருக்கும். அடுத்த இடத்தை வகிப்பது முஷ்டி முறுக்குவது. ஏதேனும் ஒரு வகையில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அவ்வேலையைத்தான் கெட்ட வார்த்தைகள் செய்கின்றன. அழுத்தமாகப் பேசும்போது கோபம் தானாகக் குறைகிறது (விஞ்ஞானப் பூர்வமான தரவுகளெதுவும் என்னிடம் இல்லை. நான் அனுபவித்த சில உணர்வுகளை எழுதுகிறேன்; அவ்வளவே).

தனியாக இருக்கும்போது பெரும்பாலும் நாம் கோபத்தை வெற்றுச் சத்தத்தின் மூலமே வெளிப்படுத்துகிறோம். ‘ஆ’ என்று தொண்டை கிழியக் கத்துகிறோம் (பல்லில்லாத குழந்தையின் ஒரே வெளிப்பாடு சத்தம் மட்டும்தான்). அப்போது என்ன நடக்கிறது? பின் நாக்கின் தசைகளில் எரிச்சலோ, வலியோ உண்டாகிறது. சிறிதுசிறிதாகக் கோபம் குறைகிறது. அது சரி, ஏன் தனியாக இருக்கும்போது கெட்ட வார்த்தைகள் அவ்வளவு எளிதில் வெளிவருவதில்லை? எவ்வாறு வெற்றுக்கூச்சல் தனிமையில் கெட்ட வார்த்தைகளைத் தாண்டி முதலிடம் வகிக்கிறது? இதற்கான எளிமையான விளக்கம் கெட்ட வார்த்தைகள் என்பவை சொற்களேயன்றி வேறல்ல. சொல் என்பது மொழி சார்ந்தது. மொழி உரையாடலுக்கோ, கருத்துப் பரிமாற்றத்திற்கோதான் தேவைப்படுகிறது. ஒரு கூட்டத்திலோ, இருவருக்கிடையிலோதான் சொல்மொழி தேவையாக இருக்கிறது. அதன் தேவை இல்லாதபோது வெரும் ஓசைகளே போதுமானவையாக இருக்கின்றன.

கெட்ட வார்த்தைகளுகென்ற ஒரு அழகியல் இருக்கிறது. அதைச் சொல்லும்போது ஆழ்மனம் அடையும் சிறிய அமைதி இருக்கிறது. எனவே, ‘மயிரு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் எனது ‘அவுசாரித்தன’த்தைக் கேள்வி கேட்காதீர். ஏனெனில், மனித குணத்தின் ஒரு இயற்கையான வெளிப்பாட்டைத்தான் நான் சொற்களாக எழுதுகிறேன். இப்படிக்குத் தங்கள் பிரம்மகத்தி.


(இன்று யாரேனும் பிரம்மகத்தி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்களா எனத் தெரியவில்லை. என்னையெல்லாம் யாராவது அச்சொல் பயன்படுத்தித் திட்டினால், சொற்பொருளை ஆராயாமல், மானசீகமாகப் புன்னகைப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.)

No comments:

Post a Comment